Loading Now
×

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று. 

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று. 

தமிழீழத் தலை நகரில் சிங்களக் கொடியை இறக்கி வீரச்சாவடைந்த வீரமறவன் திருமலை நடராஜன்.

04.02.1957  அன்று தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையில் தமிழீழத்தின் அண்டை நாடான சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது இன அழிப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின்  நினைவுநாள் இன்றாகும்.

இலங்கையின் 76வது சுதந்திர தினம் வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் 04.02.1957 அன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்கள படையால் கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதனையும் நினைவு கூறவேண்டும்.

பெப்ரவரி 4 – கறுப்பு நாள்:
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. பூர்வீக இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாமல், அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி நான்கினை வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன.

ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை. அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலையில் 1957ம் ஆண்டில் தமிழ் பேசும் மக்கள் பெப்ரவரி 4–ந் திகதி சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுஸ்டிக்க முடிவு செய்தார்கள். அத்துடன் 1957ல் சிறிலங்கா சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சியும் அறிவித்தது.

திருமலையில் 04.02.1957 அன்று கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்கள படையால் நடராஜன் இந் நாளிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
தியாகி நடராஜன் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக் கொல்லப்பட்டார். அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

பெப் 4-ந் திகதி காலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் கறுப்புக் கொடிகளைப் பிடித்துக் கொண்டும் கறுப்புச் சின்னங்களை அணிந்துகொண்டும் திருகோணமலை மடத்தடி சந்தியிலிருந்து நகரசபை காரியாலயத்தை நாடி அமைதியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வூர்வலத்தைத் திருமலை பிரதிநிதி திரு. என்.ஆர். இராஜவரோதயம், ஊர்காவற்றுறை பிரதிநிதி வி.ஏ.கந்தையா, கப்டன் ஏ.ஸி.கனகசிங்கம், டாக்டர் துரைநாயகம் ஆகியோர் முன்னின்று நடத்தினர் என சுதந்திரன் பத்திரிகை 10.02.1957இல் தகவலை வெளியிட்டது.

அங்கு ஊர்வலம் நகரசபைக் காரியாலயத்தை அடைந்ததும் நகரசபை தலைவர் திரு.த.ஏகாம்பரம் அங்கு ஒரு கறுப்புக் கொடியை ஏற்றி வைத்து உணர்ச்சிகரமாக ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் அங்கு திரளாக சென்று திருமலை மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீதும் கறுப்புக்கொடி உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து திருமலை காளிகோயில் முன்றலில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திரு. இராஜவரோதயம் தலைமை தாங்கி பேசினார்.
தியாகியான திருமலை நடராஜன்:

இந்த நேரத்தில் வெடியோசைகள் கிளம்பின. எங்கேயோ பட்டாசு கொளுத்தப்படுகிறதென்று ஆரம்பத்தில் மக்கள் எண்ணினார்கள். ஆனால் நடராஜன் என்கிற இளைஞரின் மார்பில் குண்டு பாய்ந்ததினால் அவர் பதறிக் கதறிக்கொண்டு அடிசாய்ந்தார்.

துடிக்கத் துடிக்க அவர் உயிர் பிரிந்தது. திரு.வ.நடராஜா என்கிற மற்றொரு இளைஞர் படுகாயப்பட்டார். முதியவர் ஒருவரின் கண்களினூடாக குண்டு பாய்ந்துவிட்டது.

இன்னொரு இளைஞருக்கு நெற்றியில் காயம்பட்டது. மற்றும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. சன சமுத்திரம் அல்லோல கல்லோலப்பட்டது. எங்கும் குழப்பம். எங்கும் கலவரம். எங்கும் பயங்கரத் தத்தளிப்பு நிலவியது.

வெளியில் தலைவர்களும், மக்களும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில், சிங்களவர்கள் திரண்டு மார்க்கெற் வாயில்களை மறைத்து நிற்க, சிங்களவர் ஒருவர் மார்க்கெற்றுக்குள் மறைந்து நின்று, மார்க்கெற் ஜன்னல் துவாரத்தின் மூலம் இரட்டைக் குழல் துப்பாக்கியினால் குருட்டுவாக்கில் கூட்டத்தை நோக்கி இரண்டு முறை சுட்டிருக்கிறார்.

ரவைகள் நாலாத்திசைகளிலும் பாய்ந்து, தமிழ் மக்களைப் பலிகொண்டன. கொடி காக்கும் பணியில் தியாகி நடராஜன் தன் இன்னுயிரை ஈழ மண்ணுக்காக ஈய்ந்தார்.

ஒரு மைல் தூர இறுதி ஊர்வலம்:
தியாகி நடராஜனின் புகழுடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை கையேற்றது. திரு.நடராஜன் புகழுடல் திருமலைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் சகல மரியாதைகளுடனும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
5-ந் திகதி செவ்வாய்க்கிழமை (1957) பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் ஒரு மைல் நீளத்திற்கு இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தெருநெடுகிலும் பெண்கள் கூடி நின்று கண்ணீர் வடித்தனர்.

திரு. நடராஜனின் புகழுடலை திருமலை நகரசபைத் தலைவர் திரு. த. ஏகாம்பரம், திருவாளர்கள் வி.ஏ. கந்தையா,
எம்.பி. என்.ஆர்.இராஜவரோதயம்
எம்.பி., எம். தாமோதரம்பிள்ளை, சட்டத்தரணி துரைநாயகம், கப்டன், ஏ.ஸி.கனகசிங்கம் ஆகியோர் கையேந்தித் தூக்கிச் சென்றனர்.

கந்தளாய் மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புகழுடலை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஞாபகார்த்த கட்டடத்தைக் கட்டி தமிழ் மொழியையும், கொடியையும் காக்க உயிர்நீத்த தியாகி நடராஜன் என்று பொறிக்க வேண்டும் என்று எல்லோராலும் அபிப்பிராயப் பட்டதனாலேயே தகனம் செய்யப்படாமல் அடக்கம் செய்ய்பபட்டது என சுதந்திரன் பத்திரிகை இத் தகவலை வெளியிட்டது.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை