நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி நினைவு சுமந்து…
12.02.2009
ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும்,
‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும்,
நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள்.
எம் தேசத்தின் ஊடகக் குரல்கள் பலதடவை நசுக்கப்படடன.
நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூர்த்தி என்கிற அறிய மனிதனும் இணைந்துவிட்டார்.
சிங்களத்தின் பேரினவாத எறிகணை வீச்சினால், சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்ட சுதந்திர சிந்தனையாளன் சத்தியமூர்த்தியின் இழப்பினை. தமிழீழத் தேசத்தின் பேரிழப்பாகக் கருத வேண்டும்.
ஒரே வழித் தடத்தில் நடந்த சகபயணி சத்தியமூர்த்தியின் இழப்பினை ஈடுசெய்வது மிகக் கடினம்.
உள்வாங்கிக் கொண்ட சமூக அவலங்களை, எளிய தமிழில், மிகச் சுருக்கமாகவும் அதேவேளை ஆழமாகவும் வெளிப்படுத்தும் பேராற்றல் சத்தியமூர்த்திக்கு உண்டு.
குறிப்பாக பேரினவாத தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படும் போது, அந்த அவலத்தை வார்த்தைகளில் விபரிக்கையில் மீர்த்தியின் மானுட நேசிப்பும், வதைக்கெதிரான போர்க் குணமும் மிகத் தெளிவாக வெளிப்படும்.
‘மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்’ என்கிற மானுடத் தத்துவத்தையே அவர் அடிக்கடி வலியுறுத்துவார்.
அவலத்தை கண்டு வெகுண்டெழாத மனிதன், உயிர் வாழும் தத்துவத்தை இழக்கிறான்.
என்கிற உயர் கருத்தினை சத்தியமூர்த்தி கொண்டிருப்பதே.
என்னை அவர்பால் ஈர்த்த முதன்மைக் காரணியாகக் கருதுகிறேன்.
மண் மீதான தீராத காதலும், தலைவன் மீது கொண்ட ஆழமான பற்றும், மக்கள் சக்தி மீது கொண்டே நேசிப்புமே, சத்திய மூர்த்தியின் ஊடகப் பணிக்கு உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறது.
Share this content:
Post Comment