வரலாற்று நாயகனின் வீரத்தை பறை சாற்றுவோம்…
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு முன்னெடுப்பை நோக்கமாகக் கொண்டு, போராளிகளாகிய நாம் “காலக்கடமை” என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசியச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய அமைப்புக்கள் மற்றும் தமிழீழ மண்ணையும் எமது தலைவரையும் நேசிக்கும் மக்கள் என அனைத்துத் தரப்பினருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் நாள் வெளியான, “காலக்கடமை” ஊடகப்பிரிவு வெளியிட்ட காணொளிப் பதிவில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு இவ்வாண்டு நடாத்துவது தொடர்பான எமது முதலாவது அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலந்துரையாடல்கள் ஊடாக எமது தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இடத்தில் பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
உலகத் தமிழர் வரலாற்றில், ஒப்பற்ற தலைவனாக விளங்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், தனது இறுதி மூச்சு உள்ளவரை, தான் நேசித்த தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும் அவர் வரித்துக்கொண்ட தமிழீழ இலட்சியத்தில் உறுதியாக நின்று, அந்தக் கொள்கையில் சிறிதளவும் தளராது, இறுதிவரைப் போரிட்டு வீரகாவியமானார். எமது தலைவரின் அந்த உன்னதத் தியாகத்தை, அந்த இறுதிக் கணங்களை நேர்த்தியான முறையில் பதிவுசெய்வதே எமது எதிர்காலத் தலைமுறை சரியான வரலாற்றை அறிந்துகொள்ள ஏதுவாக அமையும்.
எமது அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய உலகத்தமிழ் மக்களே!
தமிழினத்தின் வரலாற்று நாயகனின் வீரச்சாவு நினைவு நாளை உரிய முறையில் முன்னெடுப்பதற்காக “மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்பதை இதன் வாயிலாக அறியத்தருகின்றோம்.
எதிர்வரும் காலங்களில், தமிழீழத் தேசியத் தலைவருக்கான நினைவெழுச்சி நிகழ்வு தொடர்பான எமது அனைத்துச் செயற்பாடுகளும் “மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” என்கின்ற இந்த அமைப்பின் ஊடாகவே இடம்பெறும் என்பதையும் உரிமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதைவேளை, தமிழீழ மாவீரர் பணிமனையானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய வீரச்சாவை உறுதிப்படுத்தும் காணொளிப் பதிவொன்றை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள், சுவிற்சர்லாந்து நாட்டில் இடம்பெற்ற பெருநிகழ்வில் உருவாக்கியிருந்தது.
அந்நிகழ்வில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து தேசியச் செயற்பாட்டாளர்களும் போராளிகளும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
தமிழீழ மாவீரர் பணிமனையால் உருவாக்கப்பட்ட பேரறிவிப்புக் காணொளி மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” அமைப்பினூடாகவே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன்,
இந்த வரலாற்றுப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி.
ஊடகப் பிரிவு,
மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.
தமிழீழம்.
Share this content:
Post Comment