Loading Now
×

வீரத் தமிழன் முத்துக்குமாரின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வீரத் தமிழன் முத்துக்குமாரின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார்
சென்னை சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் அலுவலகம்) அருகே
29.1.2009 காலை 10.45 மணிக்கு, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளவில் ஓட்டை போட்டு, பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமார் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமார் எங்கள் ஊரில் போருக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் அதிகம்.
உலக அமைதிக்காக போராடுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

26 வயதான முத்துக்குமார், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். முத்துகுமார் மருத்துவர்களிடம் “என் சாவை அண்ணன் பிரபாகரனிடம் தெரிவியுங்கள்”என சாகும் முன் கடைசியாக சொன்னார்.

வீரத் தமிழன் முத்துக்குமாரின் பதினான்கு அம்சக் கோரிக்கைகள்-

  1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
  2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
  3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
  6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
  7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

  1. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
  2. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  3. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
  4. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  1. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார்,
67/191, திருவள்ளுவர் சாலை, மக்காரம் தோட்டம், கொளத்தூர், சென்னை – 99, 9380927441

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.
நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்.

நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.
ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Share this content:

Post Comment

அதிகம் பகிரப்பட்டவை